சுற்றுலா தளங்கள்


                                                        சித்தன்னவாசல்    

 இந்தியாவில் தமிழகத்தின் புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை செல்லும் வழியில் அமைந்துள்ளது சித்தன்னவாசல். சுமார் 70 மீட்டர் உயரம் உடைய குன்றில் ஆயிரம் ஆண்டு பழமையான ஓவியங்கள் நிறைந்து காணப்படும் சமணர் குடைவரை கோயில் உள்ளது. இங்கு சித்தர்கள் தங்கி வாழ்ந்துள்ளனர். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் சித்தன்னவாசல் சமணர்களின் மையமாக திகழ்ந்துள்ளது. இங்கு காணப்படும் முதுமக்கள் தாழிகளும், நீள்சதுர கருங்கல் கல்லறைகளும் இவ்விடத்தின் 2500 ஆண்டு பழமையை உணர்த்துகின்றன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்த பிராமி கல்வெட்டுகளும் இங்குள்ளன. 
                                    
       இந்த குன்றின்மேல் அமைந்திருக்கும் குகை ஏழடிப்பட்டம் என அழைக்கப்படுகிறது. இக்குகையில் 17 சமணர் படுக்கைகள் அமைந்துள்ளன. இது இயற்கையாக அமையப்பெற்ற குகை ஆகும். அடுத்ததாக கருங்கல் மலையைக் குடைந்து அமைக்கப்பெற்ற கோயில் உள்ளது. அறிவர் கோயில் என அழைக்கப்படும் இங்குதான் உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள் காணப்படுகின்றன. கி.பி. 9 - ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மதுரை ஆசிரியன் இளங்கௌதமன் என்னும் சமண முனிவர் குகைகோவிலின் முன் மண்டபத்தைப் புதுப்பித்து இங்கு காணப்படும் ஓவியங்களைத் தீட்டியதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன.
       இந்திய சுதந்திரத்திற்குப் பின் பராமரிப்பின்றி விடப்பட்ட இவை 1990 - க்கு பின் இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழக அரசால் பராமரிக்கப்படுகிறது.






                                               திருமயம் மலைக்கோட்டை

         

Thirumayam Fort 3.jpeg
திருமயம் மலைக்கோட்டை 1676 ஆம் வருடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் (மறவ மன்னர்கள் தங்களை சேதுபதி என்றழைத்துக் கொண்டனர்) ரகுநாத சேதுபதி என்னும் கிழவன் சேதுபதியின் (கிபி 1671-1710) காலத்தில் கட்டப்பட்டது. இன்றும் இக்கோட்டை ஒரு வரலாற்றுச் சின்னமாக இந்திய அரசின் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்றது.

         திருமயம் என்ற இந்த சிறு நகரம் பழமையும் நெடிய வரலாற்றையும் கொண்டு திகழ்கிறது. முத்தரையர்கள் கி.பி. 8-9-ஆம் நூற்றாண்டுகளில் திருமயம் உள்ளடக்கிய பகுதிகளை அரசாண்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். தொடர்ந்து சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், விஜயநகர அரசர்கள், பராக்கிரம பாண்டிய விஜயாலயத் தேவர், சுந்தரபாண்டிய விஜயாலயத் தேவர் போன்ற பாண்டிய குறுநில மன்னர்கள் என்று பலராலும் ஆளப்பட்டுள்ளது இந்த ஊர். இராமநாதபுரம் சேதுபதிகள் 16 - 17 நூற்றாண்டுகளில் திருமயம் உள்ளடக்கிய பகுதிகளை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். அடுத்து பல்லவர்களாலும், புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களாலும் ஆளப்பட்டுள்ளது இவ்வூர். கிழவன் சேதுபதியின் காலத்தில் இவ்வூர் சேதுபதி நாட்டின் வட எல்லையாகத் திகந்ததாம்.
                        

   திருமயம் மலைக்கோட்டை ஒரு வட்ட வடிவில் அமைந்துள்ள கோட்டையாகும். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காண முடிகிறது. எனினும் இந்த அகழிகள் பல இடங்களில் தூர்ந்து போய்க் காணப்படுகின்றன. பாதுகாப்பு அரணாக அமைந்த வெளிச்சுற்று மதிகள் சிதைந்த நிலையில் உள்ளன. உள்சுற்று மதிகள் இன்றும் கட்டுக்கோப்பாக உள்ளன. ஏழு சுற்று மதில்கள் இருந்ததாக இங்கே காணப்படும் தொல்லியல் வரலாற்று அறிவிப்பு பலகைகள் சொல்கின்றன. திருமயம் மலைக்கோட்டைக்கு மூன்று நுழைவாயிகள் முறையே தெற்கு, தென் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் உள்ளன.
ஒரு உயர்ந்த குன்றின் உச்சியில் இயற்கை அரண்களுடனும் கலை நேர்த்தியுடனும் அமைந்துள்ள திருமயம் மலைக்கோட்டையின் உள்கோட்டையைச் சுற்றி உயரமான மதிற்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இன்றும் இந்தச் சுற்று மதில்கள் கட்டுக் கோப்பகத் திகழ்கின்றன. உள்கோட்டைக்கு ஊரின் மேற்குப் பகுதியிலிருந்து தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்ற நுழைவாயில்கள் உள்ளன. மலைக்கோட்டையின் உச்சியில் ஒரு பீரங்கி மேடையில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கி நிறுவப்பட்டுள்ளது. இது போல கோட்டையின் தெற்கு நுழைவாயில் அருகே இரண்டு பீரங்கிகள் உள்ளன. இவற்றைத் தவிர மலைக் கோட்டையில் வேறு பாதுகாக்கப்பட்ட கட்டடங்கள் ஏதுமில்லை. எனினும் இக்கோட்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட உடை வாள்கள், பீரங்கிக் குண்டுகள், பீரங்கிகள், பூட்டுகள், சங்கிலிப் போர் உடைகள் போன்ற அரிய பல பொருட்கள் புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



                       

                                புதுக்கோட்டை அருங்காட்சியகம் 
                                               


    புதுக்கோட்டை அருங்காட்சியகம் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாநகரின் திருக்கோகர்ணத்தில் 1910 ஆம் ஆண்டில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களால் தொடங்கப்பெற்ற பழமையான அருங்காட்சியகம் ஆகும்.இவ்வருங்காட்சியகம், தமிழக அரசின் தொல்லியல் துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்த அருங்காட்சியகம் ஒரு காப்பாட்சியரால் நிருவகிக்கப்பெறுகின்றது.
               
            இந்த அருங்காட்சியகத்தில் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்கள் குறித்த செப்பேடுகள், பதப்படுத்தப்பட்ட விலங்குகள், பறவைகள், கல்வெட்டுகள், கல் சிலைகள், கனிமங்கள், மரப் படிமங்கள், உலர் தாவரங்கள், மூலிகைப்பொருட்கள், கூத்து கலைப்பொருட்கள், பனையோலைகள்,அருங்காட்சியக வெளியீடுகள், உலோகப் படிமங்கள், கலைப்பொருட்கள், தொல் தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள், முதுமக்கள் பானைகள், சுடுமண் படிமங்கள், மாந்த உடல் மாதிரிகள், கல் வகைகள், தொல்லுயிரிப் படிமங்கள், கனிமங்கள் ஆகியன காட்சிப்படுத்தப்பெற்று உள்ளன.


                                                   

                         
                                  

                                                 குடுமியான்மலை
                                         


குடுமியான்மலை, புதுக்கோட்டையிலிருந்து ( தமிழ் நாடு, இந்தியா) 20 கி.மீ. தொலைவில் உள்ள சிற்றூர். இங்குள்ள குகைகளில், பல்லவர் கால (கி.பி.ஏழாம் நூற்றாண்டு) இசைக் குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கிரந்த எழுத்தில் காணக்கிடைக்கின்றன. இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது ஆகும். தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பண்ணையும் (அண்ணா பண்ணை, குடுமியான் மலையில் இருந்து ஐந்து கிலோமீட்டர்கள்) இங்கு அமைந்துள்ளது

No comments:

Post a Comment